Showing posts with label மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளும் அவர்களது குமார தெய்வ வழிபாடும்.. Show all posts
Showing posts with label மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளும் அவர்களது குமார தெய்வ வழிபாடும்.. Show all posts

Friday, May 8, 2015

மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளும் அவர்களது குமார தெய்வ வழிபாடும் (கட்டுரை)

Penulis : kirishnakumar on Sunday, May 3, 2015 | 5:22 AM

(துரை.பிரணவச்செல்வன்)

மட்டக்களப்பு வரலாற்று ஆய்வாளர்களால் மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் “வேடர்கள்” எனக் குறிப்பிடப்படுவதனை முன்னய கட்டுரையில் விவரித்திருந்தேன். மட்டக்களப்பு வேடர்கள் மற்றும் அவர்களுடைய தெய்வ-வணக்க முறைகள் குறித்த தற்கால நிலைமைகள் தொடர்பாக இக்கட்டுரை அதன அமைகிறது.


இதற்கு முன்னதாக எழுந்துள்ள விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு “வேடர்கள்” பற்றிய ஒரு குறிப்பை எழுத வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.

“வேடர்கள்” என்ற சொல் தற்காலப் பேச்சு வழக்கில் பின்தங்கிய சமூக பொருளாதார கலாசார நிலை கொண்டோரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. எனவே மட்டக்களப்பின் பூர்விக குடிகளை இவ்வாறான ஒருஅர்த்தத்தில் இனங்காட்ட முடியுமா என்ற வினாவும் எழுகிறது. இவர்களை “வேடர்கள்” என்ற சொல்லால் சுட்டும் வழக்கு எவ்வாறு ஏற்பட்டது என்பதுவும் வினாவிற்குரியதே!

இலங்கையின் பிரபல்யமான வரலாற்று நூலான மகாவம்சம் மகியங்கனையில் வாழ்ந்த தொல்குடியினரை யக்சர்கள்(ஆங்கில மற்றும் பாளி மொழி நூலில் எவ்வாறு உள்ளது எனத் தெரியவில்லை) என்றே குறிப்பிடுகிறது. அதே போல மட்டக்களப்பின் பிரபல்யமான வரலாற்று நூலான மட்டக்களப்பு மாண்மியமும் (மட்டக்களப்பு பூர்வ சரித்திரமும்)மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளாக இயக்கர் மற்றும் நாகர் எனும் இருகுலத்தவர்களையே குறிப்பிடுவதுடன் இயக்கரை திமிலராகவும் குறிப்பிட்டுள்ளது.

க.த.செல்வராசகோபல் அவர்கள் வேடர்களை முதுநாகரிகம் மிக்க சமூகமாக குறிப்பிடுகிறாhர். எனவே தற்காலப் பேச்சு வழக்குப் பொருளில் மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளை வேடர்கள் என்ற சொல்லினால் அடையாளப்படுத்த முடியாது.

ஆயினும் தற்காலத்தில் குமார-தெய்வ வணக்க முறைகளைப் பின்பற்றுவோர் மற்றும் பூர்விகத் தொடர்புகளைப் பேணுவோர் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ள போதும் தங்களை வேடர்கள் என்றே கூறிக்கொள்கின்றனர் என்பது குறிப்பிட்டாக வேண்டிய விடயமாகும்.

இனி, மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் வாழ்ந்த இடங்கள் பற்றி வராலற்று ஆசிரியர்கள் கூறும் தகவல்கைளப் பார்ப்போம்.

மட்டக்களப்பு வரலாற்றை விபரிக்கும் நூல்களில் இயக்கர் மற்றும் நாகர் வாழ்ந்த சில இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. வெல்லவூர்க்கோபால் அவர்கள் மட்டக்களப்பு வரலாறு-ஒரு அறிமுகம் (2005) எனும் நூலில் “இயக்கர் குடியிருப்புக்கள் நாடு முழுக்கப் பரவியிருந்தமையும் மட்டக்களப்புப் பிரதேசத்தே மாணிக்க கங்கை(கதிர்காமம்) மற்றும் விந்தனைப்பகுதிகளில் அவர்கள் பரவலாக வாழ்ந்துள்ளமையும் தெரிகின்றது” எனவும் நாகர்களின் இருக்கைகளாக “…மட்டக்களப்புப் பிரதேசத்தே நாகர்பொக்கணை(மன்னம்பிட்டி), நாகர்முனை(திருக்கோவில்), நாகன்சாலை(மண்டூர்), சூரியத்துறை(மட்டக்களப்புப் பெருந்துறை) என்பனவும் குறிப்பிடப்படுகின்றன”(பக்.23) எனவும் குறிப்பிட்டுள்ளார்.

க.த.செல்வரசகோபல் அவர்கள் வேடர்கள் “மகியங்கனையை அடுத்த விந்தனை எனும் இடத்திலும் மட்டக்களப்பு வாழைச்சேனையை அண்மித்த கழுவன்கேணியிலும் அம்பாரையை அடுத்த தம்பானை எனும் இடத்திலும் வாழ்ந்து வந்தனர்” எனவும் “இவர்களை விட பெருந் தொகையானோர் இத்திசை வழியே கூட்டமாகச் சென்று மட்டக்களப்பைச்சார்ந்த சமவெளியில் தங்கலாயினர் (இணையப்பிரதி- பக்.62), எனவும் விபரிக்கிறார். ஆனால் “மட்டக்களப்பைச் சார்ந்த சமவெளியில் தங்கியமைக்கு” போதுமான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை.

வி.சி.கந்கையா அவர்கள் “மட்டக்களப்புத் தமிழகம்”(1964) என்னும் நூலில் “விஜயன் கி.மு. 540இல், பாண்டிய நாட்டிலிருந்து கொண்டு வந்த தமிழ் மக்களைக் ‘கதிராகல’ என்னும் மலைச்சாரலிற் குடியேற்றினான் என்றும் இப்பகுதி அக்காலத்து வேடராற் குடியிருக்கப் பெற்றதென்றும் சிங்கள சரித்திர நூல்கள் கூறுகின்றன. அவற்றுட் குறிப்பிடப்பெற்ற‘கதிராகல’ மலைப்பகுதி ஏறக்குறைய 1200 அடி உயரமுள்ள குன்றுகளாக இத் தமிழகத்திலே மட்டுநகரின் தென்மேல் திசையில் 17 மைல் தூரத்தே இன்றும் உள்ளது”(பக்.6-7) எனக்குறிப்பிட்டுள்ளார். இவர் குறிப்பிடும் சிங்கள சரித்திர நூல் எது என்ற குறிப்பு இல்லை.

தற்காலத்தில் வாழும் வேடர்கள் மற்றும் குமார தெய்வ – வணக்க முறைகள் பற்றிய தகவல்கைளத் தேடிய போது கிடைக்கப்பெற்ற தகவல்களை இனிக் குறிப்பிட முனைகிறேன். கிடைக்கப்பெற்ற தகவல்களில்
, கட்டுரையின் நோக்கப் பொருளுக்கு தேவையான விடயங்களை. அதாவது “மட்டக்களப்பின் பூர்விக வரலாற்றில் வேடர்கள் கொண்டுள்ளசெல்வாக்கினை” விவரிக்கவே முனைகிறேன். ஏனைய தகவல்கள், சமூக- மானிடயவில் நோக்கில் விளக்கப்படத்தக்கன.

வேடர்கள் என அடையாளப்படுத்தக் கூடியவர்களில் இரு வேறுபட்ட “குலகுழுக்கள்” அல்லது “சாதிகள்” அல்லது “குடிகள்” மட்டக்களப்பு பிரதேசத்தில் வாழ்ந்து வருவதனையும், அவர்களின் வாழிடம் மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே வாகரை-கதிரவெளி (படுவான்கரை உள்ளிட்டு) வரையும் அமைவதையும் காணமுடிகிறது.

அவர்களில் ஒரு குழுவினர் மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் என இனங்கண்ட மிக நீண்ட காலமாக மட்டக்களப்பு பிரதேசத்தில் வாழ்ந்து வருபவர்களாவர்.

இவர்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுள்ள போதும் தமது பழைய தெய்வ-வணக்க முறைகளுடன் (குமார தெய்வம் மற்றும் அதற்கான சடங்குகள்) தொர்பு பட்டவர்களாக இன்றும் உள்ளனர்.ஆனால் தெளிவான ஒரு வாழிடப்பிரதேசத்தினை இனங்காண முடியாதவாறு ஏனைய குடிகளுடன் இணைந்து வாழ்கின்றனர்.

மற்றொரு குழுவினர் அண்மைக்காலத்தில் (மகியங்கனைப் பிரதேசத்திலிருந்து) குடியேறி வாழ்பவர்கள். இவர்கள் தனித்துவமான வாழிடப் பகுதி கொண்டவர்கள்.

அண்மைக்காலத்தில் குடியேறிய வேடர்கள் வாழிடங்களில் கிரானிற்கு தெற்கே படுவான்கரையிலுள்ள கானந்தனை, முறுத்தானை, அக்குறானி எனுமிடங்கள் முக்கியமானவை. அதே வேளை வாகரை-பனிச்சங்கேணி-கதிரவெளிப் பகுதியிலும் இவர்களையொத்த குடிகள் வாழ்கிறார்கள் என்றும் அறிய முடிகிறது. அத்துடன் மன்னம்பிட்டிக்கு அருகில் சீரவணஎனுமிடத்திலும் வேடர்கள் வாழ்வதாக அறிய முடிகிறது.

கானந்தனை, முறுத்தானை, அக்குறானி பகுதிகள் ஏனைய வயல் பகுதிகளிலிருந்து வேறுபட்டு காட்டுப் பிரதேசமாக உள்ளது. 1984-85 இல் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் மிகப் பின்தங்கிய சமூக-பொருளாதார நிலையையே (வேடர் சமூகத்திற்குரியவாறு) கொண்டிருந்தார்கள்.

யுத்தகாலத்தில் இவர்கள் இடம் பெயர்ந்து ஆலங்குளத்தில் (வாழைச்சேனைக்கு அருகேபொலன்னறுவ வீதியில் உள்ள இடம்) வாழ்ந்து தற்போது மீள்குடியேறியுள்ளார்கள். அவர்கள் மத்தியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இவர்கள் மகியங்கணையிலிருந்து மூன்று தலைமுறைக்கு முன்னதாக இங்கு வந்து குடியேறியதாகவும் அவர்களில் முன்னோர்கள் சிங்களம் மற்றும் வேடபாசை தெரிந்தவர்களாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது சிங்களம் தெரியாத அளவிற்கு தமிழர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள். தற்போது மதச் சடங்குகளைப் பொறுத்தளவில் தலைவராக இருப்பவர்சிங்களப் பெயர் கொண்டவர். ஆனால் அவர்களுடைய வழியில் வந்தவர்களும் ஏனையவர்களும் தமிழ்ப் பெயர்களைக் கொண்டுள்ளனர்.

இவர்களுடைய தெய்வங்கள் வேறுபட்டன. ஆனால் பிரதான தெய்வ வழிபாட்டில் குமாரருக்கும் ஒரு பந்தல் போடப்படும், அவருக்கும் சடங்கு செய்யப்படும். ஊரின் நடுவே சிறு பிள்ளையார் கோவில் ஒன்றும் உண்டு. மிக அண்மைக்காலத்தில் மகியங்கணைப் பிரதேச அதிவாசிகள் (வேடர்கள்) இங்கு வந்து அவர்களைச் சந்தித்து சென்றதாகவும் அறியமுடிகிறது.இதனை அரசாங்கம் (அமைச்சர் விமல் வீரவன்ச) ஏற்பாடு செய்திருக்கும் போல்.

வாகரை-பனிச்சங்கேணி-கதிரவெளிப் பகுதியில் வாழ்பவர்கள் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளார்கள் என்றே தெரிவிக்கப்படுகிறது. அனால் அண்மையில் ஆதிவாசிகளுக்கான வீட்டுத்திட்டம் (மதுரங்கேணிக்குளம்) அரசால் அமைக்கப்பட்டதற்கான விழாவில், பாரம்பரிய உடைகளுடன் கலந்து கொண்டதுடன், வரவேற்பினை பாரம்பரிய முறைகளுடன்செய்துமிருக்கின்றனர். அவ்விழாவிற்கும் மகியங்கனை வேடர் பிரதிநிதிகள் அழைத்து வரப்பட்டும் உள்ளனர்.

இதனை விட சல்லித் தீவில் வாழ்பவர்கள் கடற்தெய்வங்கள் குறித்து சடங்கு செய்து வருபவர்கள் எனவும் கூறப்படுகிறது. இப்பகுதி வாழும் பழங்குடியினர் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இது பற்றிய விபரங்கள் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை.

இனி, மட்டக்களப்பின் பூர்விக குடிகள் என இனங்கண்ட, மிக நீண்ட காலமாக மட்டக்களப்பு பிரதேசத்தில் வாழ்ந்து வருபவர்கள் பற்றிய தகவல்கைளை பார்க்கலாம்.

இவர்கள் தொடர்பாக, கலாநிதி சி.மௌனகுரு அவர்கள் “மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள்” என்ற நூலில், முன்னர் வேட்டையாடுதல், மந்தை வளர்த்தல் ஆகிய தொழில்களைச் செய்த வேடர் மரபில் வந்த, தற்போது கூலி விவசாயத் தொழில், கூடை பின்னுதல், மீன் பிடித்தல், மரம் வெட்டுதல் ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ளேரே இச்சடங்கினைச்செய்கின்றனர். இவர்கள் பல இடங்களில் பரவி வாழ்கின்றனர். தாம் வாழும் இடங்களிலெல்லாம் ஒரு சிறு குமார கோயிலை வைத்திருப்பர் என்ற தகவலையும் தந்திருக்கிறார்.

மௌனகுரு அவர்களுடைய களவாய்வு தளவாயில் அமைந்துள்ள பிரதான குமார கோயிலை மையமாகக் கொண்டும் அமைந்துள்ளது. அக்கோயில் வேடர் வேட வெள்ளாளரகளுக்குரியதுஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் தகவல்களில் கவனத்திற்குரியவை.

இவர்களின் குலதெய்வம் குமார தெய்வமாகும். முருகனையே இவர்கள் குமாரர் என அழைப்பர்.

இவர்கள் தமிழ் பேசினாலும் வேடபாஷை என இவர்களால் அழைக்கப்படும் பாஷையிலேயே வணக்க முறைக்குரிய சொற்களையும், பாடல்களையும் கூறுகின்றனர்.

பந்தலிட்டு இலை குழை தென்னை ஓலை காட்டுப் பூக்கள் ஆகியவற்றாற் பந்தலை அலங்காரம் செய்து தெய்வங்களுக்கு விசேட பூஜை செய்வர்.
பூஜை நடைபெறும் சமயம், தெய்வத்தோடு சம்பந்தமுடைய பல நிகழ்ச்சிகள் நிகழ்த்திக் காட்டப்படும். உ-ம் இறுதி நாள் சடங்கில் நடைபெறும் நாடகத்தன்மை வாய்ந்த நிகழ்ச்சிகள்)
இத்தெய்வங்களுக்கெனப் பிரத்தியேகமான வணக்க முறைகளுமுண்டு. கொட்டுக்கு ஏற்ப சன்னதம் கொண்டோர் ஆடும் ஆடலும், அது சம்பந்தமான சடங்கு முறைகளுமே இத்தெய்வங்களுக்குரிய வணக்க முறைகளாகும். போன்ற தகவல்கைளத் துந்துமுள்ளார்.

தளவாய் குமார கோவில் பற்றி அவர் தரும் தகவல்கின் முக்கியமான விடயங்கள்:

மண்ணாலோ கல்லாலே கட்டப்பட்ட தனிப்பட்ட கோயில் கிடையாது. (கிராமத்தின் அல்லது காட்டின் மத்தியிலுள்ள குறிக்கப்பட்ட மரம் ஓன்றே கோயிலுக்குரிய நிலையமாகும்.)

ஆண்டுக்கொருமுறை பந்தல் தோரணிமிட்டு சடங்கு நடைபெறும். ஆவணி மாதம் கதிர்காமத்தில் தீர்த்தம் நடக்கும் அன்று இவர்களின் சடங்கு தொடங்கி ஏழு நாட்கள் நடைபெறும்.

பூசை செய்யும் “பூசாரி” கப்புகனார் என அழைக்கப்படுகிறார். சன்னதம் கொண்டு ஆடுபவர்கள் “கட்டாடி” என அழைக்கப்படுகிறார்கள். பூசகரே தெய்வம் ஏறி ஆடுவார். இரண்டு மூன்று பூசகர் இருப்பார்.

மந்திரம் சொல்லப்படுவதில்லை. வேடபாசையில் பாட்டுக்கள் பாடப்படுகின்றன. பாட்டுடன் கொட்டு எனப்படும் பறையும் அடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான கொட்டு எனப்படும் பறை ஒலி உண்டு. அதற்குத் தகவே தெய்வம் பிரசன்னமாகி ஆடும்.

முதல்நாள் சடங்கில் கப்புகனார் வீட்டிலிருந்து குமார சிலை மடைச் சாமான் பெட்டிகளை கோயிலுக்கு கொண்டு வருதல் குமாரர் அம்மாள் கன்னிமார் மடை வைத்தல் தலைமைக் கப்புகனார் குமார தெய்வத்திற்கு ஆடுதல் வண்ணான் வெள்ளை கட்டுதல் ஆலத்தித் தெய்வம் வந்து ஆடுதல் போன்ற சடங்குகள் நடைபெறும்.

இரண்டாம் நாள் சடங்கு உத்தியாக்கள்(இறந்தவர்கள்)கப்புகனார் மீது வர, வில் அம்பு எடுத்து ஆடுதல் நடைபெறும். மடை கலைக்கப்பட்டு புதிய மடை வைக்கப்படும். பின், கப்புகனார் மீது குமாரகலை, அம்மன் கலை, தெவுத்தன் கலை, காட்டுத் தெய்வம், செம்பகனாட்சி, பொய்யனாட்சி, கடற்பகுதிமாறா பணிக்கமாறா, வதனமாறா, பட்டாணி, புள்ளிக்காரன் ஆகிய தெய்வங்கள் வெளிப்படும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான கொட்டும் ஒவ்வொரு விதமான வேடபாiசை என அழைக்கப்படும் பாடலும் உண்டு.

தொடர்ந்து ஏழு நாட்கள் வரை நடைபெறும் சடங்கில், அயொத்தியாய, மாந்திய, மனமுந்த, குருவிலிமுந்த, எரிகனுமுந்த ஆகிய தெங்வங்கள் ( கூடாத நோய்களைக் கொடுக்கும் தெய்வங்கள்) வெளிப்பட்டு வில், அம்பு எடுத்து விளையாடும்.

இறுதிச்சடங்கு நாடகத்தன்மை பொருந்திய சடங்காகும். அதற்கு முதல் நாளிரவு வினாசகப்பானை எழுந்தருளப் பண்ணுவார். அன்று பலகாரம் வடிக்கும் தெய்வம் வந்து முற்படும். அதற்குப் பலகாரம் வடிப்பர். அந்நேரம் மொட்டாக்குத் தெய்வம் முற்பட்டு பலகாரம் வடிக்கும். அதன்பின் நள்ளிரவில், வினாசகப் பானை தொடர்பான சடங்கு நடைபெறும்.

இறுதி நாள் சடங்கு பகல் வேளையில் நடைபெறும். இதற்கு உயரமான பந்தல் அமைக்கப்படும். அப்பந்தல் உச்சியில் 3 கும்பா குடம், தென்னம் குருத்தோலை, வாழை மடல் கொண்டு அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்படும்.

மாறாத்தெய்வம்(வேட்டை ஆடும் தெய்வம்) கப்புகனாரில் முற்பட்டு ஆடும். மாறாத் தெய்வம் மீண்டும் வர உயரமான பந்தலில் ஏறி இறங்கும்.அதன் பின் கப்புகனார் பக்தர்களால் கொண்டு வரப்படும் தேன் பூச்சி பெட்டி, கோடாரி என்பவற்றை மற்றொரு வழியால் உயரமான பந்தலுக்குக் கொண்டு செல்ல தெய்வமும் ஏறி பந்தல் உச்சியில் தேன் பூச்சியைத் தன் தலையிலும் கப்புகனார் தலையிலும் கொட்டி விளையாடி, 3 கும்பா குடங்களையும் கோடாரியில் கொத்தி வீழ்த்தும்.

பின், மாறாத்தெய்வம் கீழே வர, படகிடை மாறா என்னும் தெய்வம் தென்னம் பாளையின் பூக்களை இதன்மேல் எறியும். மாறாத்தெய்வம் பூச்சி குத்தியது போல் பாவனை செய்து தலைக்கட்டாடியின் காலில் வீழும். தலைக்கட்டாடி பூச்சிக் கடியின் ஆகாரம் தணிப்பார்.

மேலும், பணிக்க மாறா தெய்வம், (யானை பிடித்தலுடன் சம்பந்தமானது) கடற் பகுதி, கப்பற் தெய்வங்கள், ஆச்சா தெய்வம், ஆக்கா தெய்வம் (இவை சிங்களத் தெய்வங்கள்) வைசூரி அம்மன், மணல்வாரி அம்மன், அம்மாள், சின்னமுத்து அம்மன்கள், புள்ளிக்காரத் தெய்வம் என்பனவற்றிற்கான ஆட்டங்களும் நிகழும். மற்றும் கன்னிமார் சடங்கும் (அதனுடன்இணைந்தவர்கள் தெவுத்தன், மாத்தளை தெவுத்தன்) இடம் பெறும்.

மட்டக்களப்பு ஆலயங்கள் பற்றிய பதிவுகளில் “கிரான் குமார கோயில்” இடம் பெற்றிருக்கிறது. இது அம்மக்களால் குமாரத்தன் கோவில் என அழைக்கப்படுகிறது.

கிரான் குமாரத்தன் கோயில் நிலையான இடத்தில் கல்லினால் அமைக்கப்பட்டிருக்கிற போதும், அவை பந்தல்களாகவே அமைக்கப்பட்டு பந்தல்கள் என்றே அழைக்கப்படுகின்றன. வருடத்திற்கொருமுறை ஏழு நாட்கள் “சடங்கு” நிகழ்த்தப்படுகிறது. இன்று மக்கள் தினசரி வழிபாடு செய்து வருகிற போதும், ஆகம முறையான பூசை நடைபெறுவதில்லை.

ஐயர்வழிபாடு நடத்துவதுமில்லை. கப்புகனாரே கோயில் பூசாரியாக விளங்குகிறார். தினசரி வழிபாடு “நடைப்பூசை” எனக்குறிப்பிடப்படுகிறது. இச்சொல், வருடாந்தம் நடைபெறும் “சடங்கு” எத்தகையது என்பதனைச் சுட்டிக்காட்டுகிறது. வருடாந்தம் நடைபெறும் “சடங்கு” பாரம்பரிய வழிபாட்டு முறையாக விளங்குகிறது.

இக்கோயில் கிரானில் குடியேறிய திருமலை வன்னி மற்றும் உடையார் சாதியினரால் தோற்றுவிக்கப்பட்டதாக அறியமுடிகிறது. ஆனால், படுவான்கரையிலுள்ள ‘லாவனி’ உனும் இடத்தில் வேடர்கள் நிகழ்த்திய சடங்கில் கலந்து கொண்ட போது, அவர்கள் சடங்கின் மடையொன்றினை வழங்கி, அதனை வீட்டிற்கு கொண்டு செல்லவேண்டாம், பொதுஇடத்தில் வைக்குமாறு கூறியதாகவும் அதன் வழியாகவே இக்கோயில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களுக்கும் மற்றும் ஊரிலுள்ள முக்கிய குடிகளுக்கும் ஏழு நாள் சடங்கினைச் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கப்புகனார் துறைக்காரர் குடியினரின் வழ்சாவழி உரிமையாக அமைந்துள்ளது. துறைக்காரர் குடி என்பது துறைக்கடவைத் தொழிலைச் செய்பவர் எனும் தொழில் அடிப்படையில் அமைந்துள்ளது. ஆனால் துறைக்கடவை என்பது தற்போது ஆறும் துறையும் இருக்கும் இடத்தில் அன்றி முன்னர் வேறு பகுதியில் இருந்தது என்ற செய்தியும் கிடைத்தது. கோயில்ஊரின் மையத்தில்-பிரதான வீதிக்கு அண்மையில் அமைந்திருக்கிறது. ஆனால், முன்னர் அப்பகுதி காட்டுப்பகுதியாக இருந்தது எனவும் முன்னர் குடியிருப்புக்கள் தற்போது “குடியிருப்புச் சேனை” என அழைக்கப்படும் இடத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இக்கோயிலின் பிரதான தெய்வம் குமார் அல்லது குமாரத்தன் தெய்வம் ஆகும். எனினும் இது கொழும்புக் குமாரன் என அழைக்கப்படுகிறதுடன், வாகனமாக குதிரையும் குறிப்பிடப்படுகிறது. குமாரருடைய உருவம், ஒரு அரசிளங்குமரனை ஒத்துள்ளது. பிரதான தெய்வமான குமாரர் அல்லது குமாரத்தன் பந்தல், பந்தல்
மைப்பிலன்றி சாதாரன கோயில்வடிவில் அமைந்திருக்கிறது. பி

ரதான பந்தல் வருடத்திற்கு ஒரு முறை நிகழும் சடங்கின் போது மட்டுமே திறக்கப்படும்.

குமார், புள்ளிக்காரன், கழுக்குமார், அம்மாள் மற்றும் பிற பாரம்பரியத் தெய்வங்களுக்கும்; பாரம்பரிய முறையிலமைந்த “சடங்கு” வழிபாடு நடைபெறும். சடங்கு பெருமளவுக்கு பாரம்பரியம் சிதைவடையாது இடம் பெற்று வருகிறது. தெய்வங்களுக்கு என தனியானை சிலைகள் இல்லை. பந்தலில் பீடங்கள் காணப்படுகிறது. கழுக்குமாரருக்கு கழுமரம்குறியீடாக உள்ளது. இக்கோவில் சடங்கில் கானந்தனை-முறுத்தானைப் பகுதி வேடர்களில் “தலைச்சான்கள்” (மூத்தோர்கள்)கலந்து பணிவிடைகள் செய்வார்கள்.

சித்தாண்டி முருகன் கோவில் வரலாற்றுப் பெருமை வாய்ந்த முருகன் கோவிலாகும். இக்கோவில் திருவிழாவிலும் வேடர்கள் கலந்து கொள்வார்கள். தேன் போன்ற பொருட்களைப் கொண்டு வந்து தருவார்கள் என்ற தகவலும் சொல்லப்பட்டது. ஆனால் இக்கோயிலின் மேற்கே வெளிவீதியில், குமாரருக்கு என தனியான ஒரு கோவில் உண்டு.

இக்குமாரருக்குதனியான சடங்கும் நடைபெறுவதுண்டு. அதனுடன் ஊர்ப்பகுதிகளில் வாழும் வேடர்கள் தொடர்பு பட்டுள்ளார்கள் எனத் தெரியவருகிறது. கழுமரமும் ஆயுதங்களும் வைத்து சடங்கு நிகழ்த்தப்படுகிறது. சித்தாண்டி முருகன் கோவில் இன்று மக்கள் செறிந்து வாழும் பகுதியாக உள்ள போதும், முன்னர் காட்டுப்பகுதியாக இருந்ததாகவும், முன்னர் குடியிருப்பு படுவான்கரைப்பகுதியில் அமைந்திருந்ததாகவும்,

இப்பகுதி இன்றும் குடியிருப்பு என்றழைக்கப்படுவதாகவும் அறிய முடிந்தது.
கிரான் மற்றும் சித்தாண்டியில் சொல்லப்பட்ட தகவல்களில், இவ்விரண்டு இடங்களிலும் முன்னர் குடியிருப்புக்கள் அமைந்திருக்கவில்லை என்பதுவும் அது வேறு இடங்களில் அமைந்திருந்தது என்பதுவும் அப்பகுதிகள் தற்போதும் குடியிருப்புக்கள் என அழைக்கப்படுவதும் முக்கிய கவனிப்பிற்குரிய தகவலாகும். கிரான் மற்றும் சித்தாண்டி எனுமிடங்களில்தற்போதைய மக்கள் வாழும் பகுதி, பிரித்தானியர் காலத்தின் பின், மட்டக்களப்பு – திருமலை வீதி அமைக்கப்பட்ட பின்னரே ஏற்பட்டிருக்கலாம்.

மட்டக்களப்பு நகரின் விளிம்புப் பகுதியென அடையாளங் காணக்கூடிய ஜெயந்திபுரத்திலும் குமாரர் கோவில் உண்டு. இது தற்போது முருகன் கோவிலாக மாற்றமடைந்து வருகிறது. கோவிலின் பெயரும் “ஸ்ரீ குமாரத்தன்(முருகன்) ஆலயம்” என்றே உள்ளது. பிரதான கோவில் முருகன் என்றே அமைந்துள்ளது. அங்கு ஆகம முறையிலமைந்த பூசையேநடைபெறுகிறது.

ஆனால் குமாரருக்கென் சிறு கோவில் உண்டு. இக் குமாரர் கோவிலில் குமாரருக்கான சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பிரதான கோவிலில் உள்ள முருகன் வள்ளி தெய்வானை உடன் அற்றவர். அதாவது பால முருகன். முருகன் ஏனைய இடங்களிலுள்ளது போல் வலக்கையில் வேல் ஏந்தாது இடது கையில் வேல் ஏந்தி நிற்கிறார் என்பது ஒருகுறிப்பிடத்தக்க வேறுபாடாகும். அவரை “சுப்பிரமணியர்” என அடையாளப்படுத்தி பூசை நடைபெற்றது.

முருகன் கோவில் வருடாந்தப் பூசையானது, முதலில் குமாரருக்கு பந்தலிட்டு வேடர்களால் நடாத்தப்படும் சடங்காகவே அமைந்துள்ளது. அதன் பின்பே முருகன் கோவில் திருவிழா நடைபெறும். நீண்ட காலமாக குமார சடங்கினை அப்பகுதியில் வாழ்ந்த வேடர்களே நடத்தியுள்ளார்கள். அண்மைக்காலத்தில் வேறு பகுதிகளிலிருந்து (ஊர்ப்பகுதி) வந்துவேடர்கள் சடங்கை நடத்தியிருக்கிறார்கள்.

இதற்கப்பால், மட்டுநகர் ஸ்ரீமாமாங்கப் பிள்ளையார் ஆலய வரலாறு(திரு.நாகையா-1996) எனும் நூலில், “வேட்டை காரணமாக இப்பகுதிக்கு வந்த விந்தனை வேடர்கள் இங்கு குடியேறி கொத்துப் பந்தலிட்டு ஆலயம் அமைத்தனர். தமது குல தெய்வமான முருகனுக்கும் வீரபத்திரனுக்கும் கோயில் அமைத்தனர்.” எனவும் “இன்றும் வருடாந்த விழாவில்வேடர் சந்ததியினர் பங்கேற்று வருகின்றனர்” என்ற குறிப்பும் மாமங்கன் எனும் வேடனும் பிள்ளையான் எனும் குருகுலத்தவனும் சேர்ந்து அமைத்ததால் இது மாமங்கப்பிள்ளையார் ஆலயம் எனப்பட்டது என்ற குறிப்பும் காணப்படுகிறது. (மட்டக்களப்பு வரலாற்று அடிச்சுவடிகள், இணையப்பிரதி. -113).

மட்டக்களப்பு சைவக் கோயில்கள் பற்றிய நூல்களில்(வீ.சி.கந்தையா, 1983) “கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயமும் வேடர்களால் ஆரம்பிக்கக்கப்பட்டது” மட்டக்களப்பு வரலாற்று அடிச்சுவடிகள்- இணையப்பிரதி. பக்.115) என்ற குறிப்பும் காணப்படுகிறது. இக்குறிப்பக்கள் வேடர்கள் மட்டக்களப்பின் வரலாற்றில் பெற்றிருக்கக் கூடியமுக்கியத்துவத்தினை நன்குணர்த்துகிறது.

மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் வேடர்கள் என்பதற்கான போதுமான ஆதராங்கள் கிடைக்கின்றன. ஆனால் அவர்கள் வாழ்ந்த காலப்பகுதி, அவர்களின் தோற்ற மூலம் பற்றிய தகவல்கள் போதுமானளவில்லை. அத்துடன் அவர்கள் உண்மையில் வேடர்கள் என்ற சொல்லினால் குறிப்பிடத்தக்கவர்களா? என்ற முடிவினையும் பெறமுடியாதுள்ளது.

தற்காலத்தில் இக்குடிகள் மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே பரந்த ஒரு பிரதேசத்திலே காணப்படுகிறார்கள் என்பதானால், மட்டக்களப்பின் தெற்கே இவர்கள் வாழ்ந்திருக்க மாட்டார்கள் என்ற முடிவிற்கும் வரமுடியாதுள்ளது. மேலும் தேடலை விரிவு படுத்த வேண்டும்.

குமார தெய்வ வணக்கு முறையான சடங்கிற்கும், அண்மைக்கால் வேடர்களின் வழிபாட்டு முறைக்கும் மற்றும் கண்ணகி வழிபாட்டிற்கு முறைக்குமுள்ள தொடர்புகள் ஆராயப்படவும் வேண்டும். குமார தெய்வ வழிபாட்டில் காலத்திற்குக் காலம் ஏற்பட்டுள்ள வந்துள்ள மாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். இவற்றிகு மேலாக, பெருமளவுதொல்பொருள் சான்றுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவை பற்றிய தேடலை மேற்கொள்ள வேண்டும்.

எனினும் மட்டக்களப்பின் பூர்விக குடிகள் பற்றிய இவ்வத்தியாயத்தினை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்றே கருதுகிறேன். இதற்கடுத்த பகுதியான திமிலரைப் பற்றியும் குடியேற்றங்கள் பற்றியும் போதுமான தகவல்கள் ஏற்கனவே உள்ள நூல்களில் விபரிக்கப்பட்டுள்ளது.

வெல்லவூர்க்கோபால் அவர்கள் “மட்டக்களப்பு வரலாறு-ஒரு அறிமுகம்” (2005) எனும் நூலில், பெருமளவு தகவல்களைத் தந்திருக்கிறார். மட்டக்களப்பின் வரலாற்றில் முக்கியமானதொரு விடயமாக அமையும் மட்டக்களப்பு பிரதேசத்திற்குரிய தனித்துவமான அம்சங்கள் – சமூக, கலாசார-பண்பாட்டு, மொழி பற்றிய அம்சங்கள் – பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும். இது பற்றிய தகவல்கள் ‘மட்டக்களப்பு தமிழகத்தில்” ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இவற்றினைப் பற்றிய முன்னேற்றகரமான – சரிதிட்டமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இலங்கை வரலாறு – தொல் பொருள் சான்றுகள், மற்றும் சமூகவியல் – மானிடவியல் குறித்த அறிவு தேவையாக இருக்கும்.

தற்போதைக்கு மிகச் சரிதிட்டமான காலக்கணிப்புடன் கூடிய வரலாற்றம்சங்கள் குறித்து நாம் தேடியறிய முடிந்தால், தொல்காலம் பற்றிய முடிவுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். அதற்கு மட்டக்களப்புடன் தொடர்பு பட்ட ஐரோப்பியர்கள்-மேலைத்தேசத்தவர்கள் எழுதிய குறிப்புக்கள் வெளிவரவேண்டும் போலுள்ளது. கிடைக்கும் தகவல்களைக்கொண்டு தனித்தனி விடய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மட்டக்களப்பின் வராலற்றில் இன்னமும் கண்டறியப்படாத – விளக்கப்படுத்தப்படாத விடயங்கள் உள்ள போதும் கிடைத்த சான்றுகளைக் கொண்டு தொடர்ச்சியான வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது எனக் கருதலாம். அவற்றை சரிதிட்டமாக-விஞ்ஞான பூர்வமாக விளக்க தற்போதைய நிலையில் முடியாதுள்ளது. அதற்கு மேலும் கடினமான தேடல்தேவைப்படுகிறது.
மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளும் அவர்களது குமார தெய்வ வழிபாடும் (கட்டுரை) - மட்டு செய்திகள்