Showing posts with label வந்தாறுமூலையில் நாக அரசர்களின் அரிய சின்னங்கள்இனங்காணப்பட்டுள்ளன.. Show all posts
Showing posts with label வந்தாறுமூலையில் நாக அரசர்களின் அரிய சின்னங்கள்இனங்காணப்பட்டுள்ளன.. Show all posts

Tuesday, May 26, 2015

வந்தாறுமூலையில் நாக அரசர்களின் அரிய சின்னங்கள்இனங்காணப்பட்டுள்ளன.


மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை கிராம சேவகர் பிரிவில் கி.மு 2ஆம் நூற்றாண்டுக்குரிய நாக அரசர்களின் மூன்று இராசதானிகள் ஆட்சி செய்தமைக்கான சான்றுகள் இனங்காணப்பட்டுள்ளன.
கல்லடிச்சேனை, வேரம், பாலாமடு, கிடாக்குழி பிள்ளையாரடி, வந்தாறுமூலை பலாச்சோலை வில்லுத் தோட்டம் ஆகிய இடங்களிலேயே இந்தச் சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இச் சான்றுகளை வந்தாறுமூலையைச் சேர்ந்த ஆசிரியரான கே.பத்மநாதன் இனங்கண்டதையடுத்து குறித்த சான்றுகளை வரலாற்றுத்துறை துரைசார் பேராசிரியரும், யாழ் பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் கடந்த வாரம் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு அதனை உறுதிப்படுத்தினார்.
குறித்த பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நாகர் கால சான்றுகள் பற்றி பேராசிரியர் குறிப்பிடுகையில், கல்லடிச்சேனை வேரம் எனும் இடத்தில் வந்தாறுமூலை விஸ்ணு ஆலயத்திற்கு சொந்தமான காணியில் பத்துக்கு மேற்பட்ட கருங்கற்தூண்கள் மிக ஆழமான நிலையில் நிலைக்குத்தாக நடப்பட்டுள்ளன.
அவற்றுள் நிலத்திற்கு மேலாகவுள்ள 7′ 6′ நீளமும் 1′ அகலமும் உடைய தூணையும், 9′ 10′ நீளமும் 1’அகமும் உடைய தூணையும் ஆய்வு செய்தபோது அதில் தமிழ் பிராமிக் வரிவடிவம் காணப்பட்டது. அதில் “வேள் நாகன் மகன் வேள் நாகன்”என நாகரசர்களின் பெயரும் ‘வேள் நாகன் பள்ளி’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் கருத்து, நாகரசர்களின் அரண்மனையை குறிப்பதாகும். மற்றுமொரு தூணில் நாக பந்தத்தின் உருவமும் காணப்பட்டது.
பாவுகை கல் ஒன்றில் மணி நாகன் பள்ளி என காணப்பட்டது. இதன் கருத்து நாகரசர்களின் வழிபாட்டுத் தலம் என்பதாகும். இங்கு ‘வேள்’ எனக் குறிப்பிடப்படுவது அரசர்களுக்கு வழங்கப்படும் உயரிய சிறப்புப் பட்டம்.
இங்கு கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து சான்றுகளிலும் வேள்நாகன், வேள் கண்ணன், வேள் நாகன் பள்ளி, மணி நாகன் பள்ளி என குறிப்பிடப்பட்டுள்ளன.
பாலாமடு வயற்காணியில் ஆய்வினை மேற்கொண்டபோது ஐம்பதிற்கும் (50) மேற்பட்ட கருங்கற் தூண்களும், அதிகளவான செங்கல் இடிபாடுகளும், செங்கல் ஓடுகளும், செங்கபில கல் ஓடுகளும், சுடுமண்ணினால் செய்யப்பட்ட நாகத்தின் உருவம், சுடப்பட்ட நீரேந்தும் தாழி, மட்குடம் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சான்றுகளிலும் வேள் நாகன் வேள் கண்ணன், வேள் நாகன் மகன் வேள் கண்ணன், வேள் கண்ணன் மகன் வேள் நாகன் என நாகரசர்களின் பெயர்களும் வேள் நாகன் பள்ளி எனவும் தமிழ் பிராமி வரிவடிவில் எழுதப்பட்டிருந்தன.
அத்தோடு 5’6′ விட்டம் உடையை அரைவட்டக் கல்லிலும் 2′ 5′ விட்டமுடைய கருங்கல்லிலும் மணி நாகன் பள்ளி என எழுதப்பட்டிருந்தது. வந்தாறுமூலை பலாச்சோலை வில்லுத்தோட்டம் எனும் இடத்தில் பரந்த நிலப்பரப்பில் 30இற்கு மேற்பட்ட கருங்கற் தூண்களும் செங்கல் இடிபாடுகளும் ஈமைத்தாழித்துண்டங்களும், செங்கல் ஓடுகளும், செங்கபில ஓடுகளும், வட்டமூடிக் கற்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றிலும் கருங்கற் தூண்களில் வேள் நாகன் வேள் கண்ணன், வேள் கண்ணன் மகன் வேள் நாகன், வேள் நாகன் மகன் வேள் கண்ணன் என நாக அரசர்களின் பெயரும், மணி நாகன் பள்ளி எனவும் எழுதப்பட்டிருந்தன. செங்கற்களிலும் மணி நாகன் பள்ளி என எழுதப்பட்டிருந்தன. 1’10’ விட்டமுடைய ஓரே அளவான ஏழு வட்டம் முடிக்கல் காணப்பட்டன. இதில் வேள் நாகன் என எழுதப்பட்டிருந்தது.
இலங்கையில் கி.மு 2ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தமிழ் அரசுகளும் குடியிருப்புக்களும் உருவாகியுள்ளன. இதில் நாகர்கள் தமிழர்கள் ஆவர். இவர்கள் நாகரிகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்தவர்களாகவும் நகரங்களை நிர்மாணித்து அரச ஆட்சிகளையும் நிறுவினர். கட்டடக்கலையில் வளர்ச்சி அடைந்தவர்களாகவும், விவசாயத்தை அறிமுகம் செய்தவர்களாகவும் விளங்கினர்.
நாகர்கள் அரண்மனையினை அமைக்கும்போது அதனுடன் வழிபாட்டுத்தலங்களையும் குடியிருப்புக்களையும் உருவாக்கினர்.
மட்டக்களப்பில் நாகரைப் பற்றி இதுவரையான ஆய்வுகளில் எட்டு நாகராச்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிக முக்கியமானதாக காணப்படுவது நான்கு ஆகும்.
அவற்றுள் மூன்று வந்தாறுமூலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.
இவை பெருங்கற் பண்பாட்டுடன் தொடர்புடையவை என்பதை உறுதிப்படுத்துகின்றன. என வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.பத்மநாதன் தெரிவித்தார். குறித்த பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நாகர் காலத்துக்குரிய கல்வெட்டு சான்றுகளை வரலாற்றுதுறை துரைசார் பேராசிரியரும், யாழ் பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் தலைமையிலான குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.Batti