இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர்களின் கிணற்றையும், நாகக்கல்லையும் அடையாளம் கண்டிருப்பதாக யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சி பத்மநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் சிறியதொரு கிணறு காணப்படுகிறது. மூன்றடிக்கு மூன்றடி நீல அகலங்களுடன் சதுரவடிவிலான இந்த கிணறு சுமார் இருபது அடி ஆழம் கொண்டிருப்பதாகவும், இந்த கிணற்றின் உட்சுவர் கருங்கற்களினால் அமைக்கப்பட்டிருப்பதாகவும் பத்மநாதன் தெரிவித்தார்.
இந்த கிணற்றின் கருங்கற்களில் தமிழ் பிராமி எழுத்துக்களில் “மணி நாகன்” என்று எழுதப் பட்டிருப்பதாக தெரிவித்த பத்மநாதன், தமிழ் பிராமி எழுத்துருக்கள் கி மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டுவரையில் புழங்கியதால், இந்த கிணறும் அந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்று தாம் கருதுவதாகவும் விளக்கினார்.
இலங்கையின் பூர்வீக குடியினரான நாகர்களின் கல்வெட்டுக்களில் காணப்படும் தமிழ் பிராமி எழுத்துருக்கள், நாகர்களும் தமிழரும் ஒன்றே என்கிற தமது கருதுகோளுக்கான மற்றும் ஒரு வலுவான ஆதாரமாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார் பத்மநாதன்.
இது குறித்து அவர் பிபிசிக்கு அளித்த செவ்வியின் விரிவான ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
Source :BBC