இலங்கை மட்டக்களப்பில் பிறந்து பாப்வா நியூகினியில் மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் ஆதித்தன் செல்வநாதனுக்கு பிரிட்டிஷ் அரசு OBE விருது வழங்கி கௌரவித்துள்ளது.
சிறிய நாடான பாப்வா நியூகினியிலுள்ள மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்கியதற்காகவே இந்த விருது வழங்கப்படுவதாக பாராட்டுப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பாப்வா நியூகினியில் மருத்துவராக பணியாற்றி வரும் அவர், விமானங்களில் பறப்பவர்களின் உடல் நிலை குறித்த சிறப்பு மருத்துவப் படிப்பை படித்துள்ளார்.
பாப்வா நியூகினியில் போதிய உயர்தர மருத்துவ வசதிகள் இல்லையென்றும், உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர் மேலதிக சிகிச்சைகாக ஆஸ்திரேலியாவுக்கோ அல்லது சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது எனவும் அவர் கூறுகிறார்.
இலங்கையில் போர் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆகும் நிலையில், அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது என்று தொடர்ச்சியாக அரசுகள் கூறி வரும் வேளையில், சந்தர்பம் கிடைத்தால் பிறந்த நாட்டுக்கும் சென்று பணியாற்ற விருப்பம் உள்ளதாகவும் டாக்டர் ஆதித்தன் செல்வநாதன் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரும் நோக்கில் சட்டவிரோதமாக படகுகளில் செல்பவர்களை நடுக்கடலில் இடைமறித்து இந்தோனேஷியாவுக்கோ அல்லது பாப்வா நியூகினியிலுள்ள சிறப்பு முகாமுக்கோ ஆஸ்திரேலியா அனுப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன.
அவ்வகையில் மானூஸ் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்குப் போதிய கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை எனவும் அவர் கூறுகிறார்.
அகதிகளாக வருபவர்கள் அங்கு தங்க வைக்கப்படுவதில் மக்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.